கிள்ளியூர் சட்டசபைத் தொகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக ரூபாய் 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம் எல் ஏ ராஜேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:- கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. அதை சீரமைக்க தொகுதி முழுவதும் பல்வேறு தரப்பினர் என்னிடம் வலியுறுத்தினார்கள்.
அவர்கள் கோரிக்கையை ஏற்று கிள்ளியூர் பகுதியில் பழுதடைந்த சாலைகள், கல்வெட்டுகள் ஆகியவற்றை சீரமைக்க வலியுறுத்தி, முதலமைச்சர், மாவட்ட கலெக்டர், அரசு முதன்மை செயலாளர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என அனைவரிடமும் மனுக்கள் மூலமாகவும், நேரில் சென்றும், தொடர்ந்து சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்தினேன். அதன்படி கில்லியூர் தொகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூபாய் 8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் அனைத்திலும் விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.