இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கோவையில் இரண்டாவது நாளாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரிமாறியதாக NIA தரப்பில் சொல்லப்படுகின்றது.
இதையடுத்து கோவை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீடிர் சோதனையில் ஈடுபட்டனர். உக்கடம் பகுதியில் அசாருதீன், குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் , போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோர் வீடுகளில் நடந்த இந்த சோதனையில் செல்போன்கள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றை NIA அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் IS அமைப்புடன் தொடர்பில் இருந்து இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உதவியதாக முகமது அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அசாருதீனை கைது செய்தனர். இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் 3 இடங்களில் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடத்துகின்றனர். அன்பு நகர் ஷாஜகான், கரும்புக்கடை ஷபியுல்லா வின்சென்ட் ரோடு முகமது உசேன் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.