கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மற்றொரு கொடிய நோய் பரவி வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
குஜராத், டெல்லி, மும்பை மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் அரிய வகைப் பூஞ்சை நோயான மியூகோமிகோசிஸ் என்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அகமதாபாத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 44 பேரில் 9 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று நோய் கண் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் இஎன்டி அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனாவால் தூண்டப்பட்ட மியூகோமிகோசிஸ் பாதிப்பு பல நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தார்.
இந்த ஆபத்தான பூஞ்சை அரிதாக இருந்தாலும், இது புதிய நோய் தொற்று அல்ல. ஆனால் கொரோனா தூண்டுதல் காரணமாக இது ஏற்படுவது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமிகோசிஸ் என்று அழைக்கப்படும் இந்த நோய்தொற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள், நீண்டகாலமாக குறைவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களை பாதிக்கின்றது.
கொரோனாவில் இருந்து மீண்டு வந்த நோயாளிகளுக்கு இந்த நோய் தொற்று அதிகமாக பாதித்து இருப்பது தெரிய வருகிறது. இதுதான் தற்போதைய பெரும் கவலைக்கு காரணம். கடந்த 15 நாட்களில் 50 சதவீத நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் கண்பார்வை, மூக்கு, மற்றும் தாடை எலும்பு ஆகியவற்றில் பிரச்சினை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோய் பாதிக்கப்பட்டவர்களின் தற்போது 50 சதவீத இறப்பு விகிதம் உள்ளது.