நியூயார்க்கில் நாளையில் இருந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதாலும் காற்று மாசடைகிறது. அதேபோல் எரிக்காமல் எங்கேயாவது தெருவோரங்களில் தூக்கி எரிந்து விட்டால் விலங்குகள் அதனை சாப்பிட்டு உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் பிளாஸ்டிக் பூமிக்குள் புதைந்து மட்காமல் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றது. இப்படி பல பிரச்சனைகள் பிளாஸ்டிக் பைகளால் உள்ளன. உலகில் இருக்கும் பல நாடுகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆம், அங்கு ஆண்டு தோறும் 2, 300 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாக நியூயார்க் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும் இத்தகைய ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை உத்தரவால், அனைத்து வாடிக்கையாளர்களும் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை தாங்களே கொண்டு வருவதற்கு வணிக வளாகங்கள் ஊக்குவித்து வருகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் ஓரிகான் மாநிலங்கள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.