தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப்போவதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
வருகின்ற பாராளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , தேமுதிக , பாமக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி இடம்பெற்றுள்ளது. இதில் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தனி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல் செய்த போது போட்டியிடும் சின்னத்தில் இரட்டை இலையை குறிப்பிட்டிருந்தார் . பின்னர் இது குறித்து அவர் கூறுகையில் , தனி சின்னம் வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தில் கேட்டும் இது வரை எந்த பதிலும் வரவில்லை . மேலும் பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று கோரிக்கை விடுத்தனர் . இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று அதிமுக_வில் இருந்து எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.