விக்ரம் பிரபு நடிப்பில் மணி ரத்னம் நிறுவனம் தயாரிக்கும் படத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்று வெளியிடை போன்ற படங்களையும் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி கண்ட செக்க சிவந்த வானம் படத்தையும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்நிறுவனம் தற்போது தங்களது 19 – வது படைப்பாக “வானம் கொட்டட்டும்” என்ற புதிய படத்தைதயாரிக்க உள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். மேலும் கதாநாயகியாக மடோனா செபஸ்டியனும்,தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கின்றனர். நடிகர் விக்ரம் பிரபு முதல் முறையாக மணிரத்னம் நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகிறார்கள். மணி ரத்னத்தின் உதவியாளரான தனா இதற்கு முன்பு படைவீரன் படத்தை இயக்கி பாராட்டுகள் பெற்று தற்போது இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்கவுள்ளது .