Categories
உலக செய்திகள்

அமீரகத்தின் புதிய விண்வெளி வீரர்கள்… சிறப்பு பயிற்சிக்காக அமெரிக்கா வருகை… வெளியான முக்கிய தகவல்..!!

புதிய விண்வெளி வீரர்களாக அமீரகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நோரா அல் மத்ரூசி மற்றும் முகமது அல் முல்லா ஆகிய இருவரும் அமெரிக்காவிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் அமீரகத்தின் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்களான சுல்தான் அல் நியாதிக்கும், ஹசா அல் மன்சூரிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் இருவரும் கடந்த ஒன்பது மாதங்களாக ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் நாசாவின் அதிநவீன டி 38 ஜெட் விமான பயிற்சியும், விண்வெளி பயணத்தின் போது விண்கலத்தில் உள்ள இருக்கையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகமது அல் முல்லா மற்றும் நோரா அல் மத்ரூசி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு 2-வது கட்ட விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு சிறப்பு பயிற்சிக்காக சென்றுள்ளனர். அங்கு மன்சூரி மற்றும் சுல்தான் ஆகிய இருவரும் ஏற்கனவே பயிற்சி பெற்று வரும் நிலையில் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர். மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அவர்கள் நான்கு பேருக்கும் 30 மாத சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பயிற்சியில் விண்கலனிலிருந்து உயிர் தப்பிப் பிழைப்பது மற்றும் விண்வெளியில் நடப்பது உள்ளிட்டவை குறித்த முக்கிய பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பூமியில் தரையிறங்கும் போது ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து உயிர் தப்பிப் பிழைப்பது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் எவ்வாறு தப்பிப்பது உள்ளிட்டவை குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் 4 பேருக்கும் புதிய கருவிகளை பொருத்துதல், சர்வதேச விண்வெளி மையத்தின் கணினி செயல்பாடுகள், ரோபோக்களை கையாளும் விதம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்த மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது.

Categories

Tech |