சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை முதலமைச்சர் நியமித்துள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரக் கூடிய நிலையில் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களை ஐந்தாக பிரித்து மூன்று மண்டலத்திற்கு ஒரு அமைச்சர் என இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. 5 அமைச்சர்கள் கொண்ட குழுவில், ஜெயக்குமார், கேபி அன்பழகன், காமராஜ், ஆர்.பி உதயகுமார் மற்றும் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அமைச்சர் ஜெயக்குமாருக்கும் 3, 4, 5ஆகிய மண்டலமும், அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு 13, 14, 15 ஆகிய மண்டலமும், அமைச்சர் காமராஜ் 8, 9, 10 ஆகிய மண்டலமும், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் 1, 2, 6 ஆகிய மண்டலமும் , எம்.ஆர் விஜயபாஸ்கர் 7, 11, 12 ஆகிய மண்டலமும் என ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் 5 பேரும் சம்மந்தப்பட்ட மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னையை பொருத்தவரை ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு என்பது அரசால் நியமிக்கப்பட்டு, கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அமைச்சர்கள் குழுவின் மேற்பார்வையில் ஒருங்கிணைப்பு பணி என்பது சென்னையில் நடைபெறும் என்று அரசாணை மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போதைய நிலவரப்படி 18 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா தொற்று என்பது அதிகரித்து இருக்கக் கூடிய நிலையில், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3388 பேருக்கும், அடுத்தபடியாக தண்டையார்பேட்டையில் 2,261 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஐந்து மண்டலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளன நிலையில் தமிழக அரசால் அமைச்சர்கள் கொண்ட குழு என்பது தற்போது அமைக்கப்பட்டுள்ளது.