பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோ காஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்களில் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அநீதியாக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 5-வது நாளாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அறக்கட்டளை செயலாளர் நடவடிக்கை எடுத்து வருவதற்கு கண்டனம் தெரிவித்த பேராசிரியர்கள், தமிழக அரசு உடனடியாக பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளுக்கு தனி அதிகாரியை நியமித்து கல்விச் சூழலையும், மாணவர்கள், பேராசிரியர்கள் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.