தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். ஆனால் திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது என்று சர்ச்சை கிளம்பியதால், வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார்கள் என்று தகவல் வெளியானது. கடந்த ஜனவரி மாதமே வாடகை தாய் முறைக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்ட நிலையில், நயன் மற்றும் விக்கி தம்பதியினர் வாடகைத்தாய் சட்டத்தை மீறி குழந்தை பெற்றுக் கொண்டதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தது.
இதன் காரணமாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தை விவகாரம் குறித்து தமிழக அரசின் சார்பில் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்ட விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இரட்டைக் குழந்தைகள் விசாரணை அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று தெரிவித்தார். மேலும் நாளை அறிக்கை வெளியான பிறகு நயன் மற்றும் விக்கி தம்பதியின் வாடகைத்தாய் விவகாரம் குறித்த உண்மை நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.