நவராத்திரி விழா வருகிற 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மா துர்காவின் அருளைப் பெற நவராத்திரி விழாவை பக்தியுடன் கொண்டாட வேண்டும்.
காத்யாயனி மந்திரத்தின் தெய்வம் தேவி காத்யாயனி ஆவார். நவ துர்காவின் ஆறாவது வடிவம் தான் காத்யாயனி தேவி . ‘காத்யாயனி’ என்ற சொல்லுக்கு ‘கடினத்தன்மை மற்றும் அழிவுகரமான அகங்காரத்தை அகற்றக்கூடியவர்’ என்று பொருள் ஆகும். தேவி காத்யாயனி சிங்கத்தின் மீது அமர்ந்து, 3 கண்களையும் 4 கைகளையும் உடையவர். ஒரு கையில் ஆயுதம், மற்றொன்று தாமரை; மீதமுள்ள 2 கைகளும் விருப்பங்களை வழங்குவதற்காக உள்ளன.
திருமணத்திற்கான காத்யாயனி மந்திரம் பாகவத புராணத்தில் இருந்து வந்தது. கிருஷ்ணரைக் கணவனாகப் பெறுவதற்காக ‘கோபியர்கள்’ மா காத்யாயனியை வழிபட்டுள்ளனர். காத்யாயனி மந்திரம் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷம் அல்லது கிரகங்களின் எதிர்மறை தாக்கங்கள் போன்ற அனைத்து தடைகளையும் அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காத்யாயனி மந்திரம்:
“ஓம் காத்யாயனி மஹாமாயே மஹாயோகினியாதீஷ்வரி
நந்த் கோபு சுதம் தேவி பதிம் மே குரு தே நமஹ்.”
அல்லது
“சந்திரஹசோஜ்வலகர ஷர்துல்வர்வஹ்னா காத்யாயநி ஷுபம் தத்யாதேவி தானவகாதினி”
காத்யாயினி மந்திரத்தின் பலன்கள்:
பராசக்தியின் ஒரு அம்சமான ஸ்ரீ காத்யாயனி தேவிக்குரிய இந்த மந்திரத்தை தினமும் காலை 27 முறை துதிப்பது மிகவும் நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் வீட்டில் இருக்கும் அம்பாள் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தீபமேற்றி இம்மந்திரத்தை 108 முறை 1008 வரை உரு ஜெபிப்பதால் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
காத்யாயனி மந்திரத்திற்கு பிறந்த ஜாதகத்தில் இருக்கும் குஜ அல்லது மங்கள தோஷத்தை நீக்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. மாங்க்லிக் தோஷம் திருமணத்தை தாமதப்படுத்துவது மட்டுமல்லாமல், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் பல சிக்கல்களையும் உருவாக்குகிறது. திருமணமான தம்பதிகளும் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் உறுதிப்படுத்தவும், விரைவில் குழந்தை பிறக்கவும் காத்யாயனி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் பயனடையலாம்.