Categories
உலக செய்திகள்

நாசா வெளியிட்ட புகைப்படங்கள்.. செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்திருக்க வாய்ப்பு.. வானியலாளர் வெளியிட்ட தகவல்..!!

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள் அதில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று, செவ்வாய் கிரகத்தில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருக்கிறதா? என்பதை ஆராய பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில், அந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

ஆய்வாளர்கள், அப்பள்ளத்தாக்கில் நீர்நிலைகள் இருந்திருப்பதற்கான ஆதாரம் இருக்க வாய்ப்புள்ளது என்று கருதினார்கள். எனவே, அந்த பள்ளத்தாக்கிற்கு விண்கலம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது நாசா, பெர்சவரன்ஸ் விண்கலத்தினுடைய ரோவர் கருவியால் செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.

புளோரிடாவில் இருக்கும் எமி வில்லியம்ஸ் என்ற நாசா வானியலாளரின் தலைமையில் இயங்கும் ஒரு குழு தான் பெர்சவரன்ஸ்’ விண்கலத்தின் இயக்கங்களை ஆராய்ந்து வருகிறது. தற்போது நாசா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தொடர்பில் எமி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளதாவது, ஜெசேரோ பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் உள்ள பாறைகளின் அமைப்பு, பூமியின் நதி டெல்டாக்களில் இருக்கும் வடிவங்களுடன் அதிகமாக ஒத்துப்போவதாக கூறியுள்ளார்.
அந்த புகைப்படத்தில் இருக்கும் மூன்று அடுக்கு கொண்ட வடிவம், சுமார் 3.7 பில்லியன் வருடங்களுக்கு முன், செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்திருக்கிறது என்பதன் ஆதாரமாக இருக்க வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள், புத்தகம் படிப்பது போல தான்.  ரோவர் கருவியை எந்த பகுதிக்கு அனுப்பலாம் என ஆய்வாளர்கள் முடிவெடுக்க இது உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |