அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பும் திட்டத்தை மூன்றாம் தடவையாக தள்ளி வைத்திருக்கிறது.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், மனிதர்களை மீண்டும் சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. வரும் 2025 ஆம் வருடத்திற்குள் மனிதர்களை அங்கு அனுப்ப ஆர்ட்டெமிஸ்-1 திட்டம் தொடங்கப்பட்டது. சந்திரனின் மேற்பரப்பிலிருந்து 60 மைல்கள் அருகில் ஓரியன் எனும் விண்கலத்தை பறக்கச் செய்ய நாசா தீர்மானித்தது.
அதன்படி கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்ட்டெமிஸ்-1 ராக்கெட்டை அனுப்ப ஏற்பாடுகள் நடைபெற்றது. ஆனால் தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டு அந்த திட்டத்தை தள்ளி வைத்தனர். அதன் பிறகு, இம்மாதம் மூன்றாம் தேதி அன்று ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் எரிபொருள் கசிந்ததால் திட்டம் வரும் 23ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மீண்டும் ராக்கெட் அனுப்ப தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்படி வரும் 27ஆம் தேதி அன்று ராக்கெட்டை அனுப்ப தீர்மானித்துள்ளனர்.