புதுக்கோட்டை மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தந்தை சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதன் பின்பு தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக தந்தை தெரிவித்ததால் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. திருச்சி மண்டல ஐஜி மற்றும் புதுக்கோட்டை எஸ்பிஐ அருண் சரத்குமார் உள்ளிட்டோர் 6 தனிப்படைகள் அமைத்து இந்த வழக்கை விசாரித்தார்கள்.
கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் போலீசாருக்கு சிறுமியின் தந்தை மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் தந்தையை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தந்தை பன்னீர்செல்வமும் அவரது உறவினர் குமார் என்பவரும் சேர்ந்து மூட நம்பிக்கையின் அடிப்படையில் சிறுமையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். செல்வம், பணம் கிடைக்கும் என்று மந்திரவாதி சொன்னதை கேட்டு பெற்ற மக்களையே தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.