தலீபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொதுமக்களும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களின் கையில் சென்றது. இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனையடுத்து போதிய உணவு, குடிநீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் 5 வயதுக்குட்பட்ட ஒரு கோடி குழந்தைகள் தவித்து வருவதாக யுனிசெப் அமைப்பு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் பி.டி.13 பகுதியில் மிகவும் பலம் பொருந்திய குண்டு ஓன்று வெடித்தது.
இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் தற்போது நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் தலீபான்களை குறிவைத்து தொடர்ச்சியாக குண்டுகள் வெடிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களில் மூன்று பேர் பொதுமக்கள் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஆப்கான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவும் தலீபான்கள் பொறுப்பேற்றபின் நங்கர்ஹார் மாகாணத்தில் நடந்த முதல் குண்டு வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.