இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கமளித்துள்ளார் .
இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில்,” ரோகித் சர்மாவை அணியின் ஒருநாள் தொடருக்கும் கேப்டனாக நியமிப்பதற்கு அணி தேர்வாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது .அதோடு இது குறித்து விராட் கோலியிடமும் பேசப்பட்டது.
ஆனால் உண்மையில் பிசிசிஐ விராட் கோலியிடம், டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என கேட்டுக்கொண்டது .ஆனால் அவர் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு இரண்டு வெள்ளை-பந்து வடிவங்களுக்கு 2 கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என அணி தேர்வர்கள் கருதினர் .இதன் காரணமாக ஒரு நாள் தொடரிலும் ரோகித் சர்மாவை கேப்டனாக்க முடிவு செய்யப்பட்டது . ரோகித் சர்மாவின் தலைமை திறன் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது .அதேசமயம் விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்ந்து நீடிப்பார். இந்திய கிரிக்கெட் சிறந்த வீரர்களின் கையில் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம் .அதோடு வெள்ளைப் பந்து வடிவத்தில் கேப்டனாக விராட் கோலியின் பங்களிப்புக்கு நன்றி “இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.