வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் பகுதியில் விறகு கரி வியாபாரியான செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபத்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நிதீஷ் கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்லமுத்து தனது தந்தை கந்தசாமியின் உடல் நலம் சரியில்லாததால் அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் அவருடன் அவரது மனைவியும் உடன் சென்றுள்ளார். அவரது மகன் நிதீஷ் கிருஷ்ணன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நிதிஷ் கிருஷ்ணன் கோவையிலிருந்து நாச்சிபாளையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்துள்ளது.
மேலும் அதில் மிளகாய் பொடி தூவி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து நிதிஷ் குமார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நிதீஷ் குமாரின் தந்தை செல்லமுத்து இதுகுறித்து அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அவினாசிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.