மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகர் குணால். இவரது இயற்பெயர் குணால் குமார் சிங். இவர் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மாடலிங் செய்து வந்தார். மாடலிங் மூலமே தனது திரையுலக வாழ்க்கையை அவர் தொடர்ந்தார். காதலர் தினம் படத்தின் மூலம் இவர் முதன் முதலில் தமிழில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து பார்வை ஒன்றே போதுமே, நண்பனின் காதலி, புன்னகை தேசம், வருஷம் எல்லாம் வசந்தம், பேசாத கண்ணும் பேசுமே உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த வேளையில் நடிகை லவீனாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. லவீனாவுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக குணாலின் மனைவிக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் குணால் மனைவி அவருடன் சண்டையிட்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த காரணத்தினால் விரக்தியில் இருந்த குணால் பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குணாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
நடிகர் குணாலின் தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. காதலர் தினம் படத்திற்குப் பின்னர் அவர் நடித்து வெளியான எந்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை. இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் பட வாய்ப்புகள் கிடைக்காததாலும் விரக்தியில் இருந்த குணால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கூறப்படுகிறது. என்ன பிரச்சனையாக இருந்தாலும் தற்கொலை என்பது அதற்கு நிரந்திர தீர்வு இல்லை.