வேன் கவிழ்ந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் பலமனேர் பகுதியில் ராம்ஜி என்ற டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் பலமனேரிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிகொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருக்கும்போது தனியார் திருமண மண்டபம் எதிரில் நிலைதடுமாறிய பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதில் டிரைவர் ராம்ஜி வேனுக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டு நிலைய அலுவலர் அரிகிருஷ்ணன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராம்ஜி சடலத்தை கைப்பற்றினர். அதன்பின் ராம்ஜி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.