2 இடங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி ஒரு மாத காலத்தில் நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியின் பல்வேறு பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுவதால் பொதுமக்கள் ரோட்டை கடந்து செல்வதற்கு அவதிப்படுகின்றனர். இதனால் நிரந்தர தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் வகையில் நடைமேம்பாலம் அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி நகர்புற பகுதி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் பணிகள் மேற்கொள்வதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நெடுஞ்சாலை துறையினரிடம் அனுமதி பெறப்பட்டது.
இவற்றில் குமரன் சாலை பகுதியில் நேரு வீதி சந்திப்பு பகுதியில் இருந்து டவுன்ஹால் பேருந்து நிறுத்தம் அருகில் இறங்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க 70 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டள்ளது. இதேபோன்று புஸ்பா சந்திப்பு பகுதியில் காலேஜ் ரோடு பகுதியையும், பி.என். ரோடு பகுதியும் இணைக்கும் வகையில் 43 லட்சம் ரூபாய் செலவில் நடை மேம்பாலம் அமைக்க இருக்கிறது. இதனையடுத்து இரு இடங்களிலும் தூண் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியானது ஒரு மாத காலத்தில் முடிவடைந்து பாலம் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.