பேஸ்புக்கில் தன் கணவனை கொலை செய்து விட்டதாக மனைவி பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 36 வயது பெண் தன் கணவனுடன் டெல்லி சத்தார்பூர் பகுதியில் வசித்து வருகிறார். இருவரும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேறு பதவிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் அந்தப் பெண் தன் கணவரை குத்தி கொலை செய்து விட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே புகுந்த போது கணவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவருக்கு அருகிலேயே மனைவி சுய நினைவின்றி மயங்கி கிடந்தார். பின்னர் அவரை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த பெண் அவரை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவரிடம் வாக்குமூலம் பெற முயற்சி செய்து வருகின்றனர். கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.