புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழ செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்போம் என்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், என் அன்பிற்குரிய தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டார்கள். அவரை பின்பற்றும் அம்மாவின் அரசும், மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது. வேளாண்மை, நீர் மேலாண்மை, பள்ளிக் கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், எரிசக்தி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சமூக நலன் போன்ற அனைத்து துறைகளிலும் தமிழகம் சாதனை படித்து மத்திய அரசின் விருதுகளை பெற்று வருகிறது.
மாண்புமிகு அம்மாவின் அரசு மக்கள் நல் வாழ்விற்காகவே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை மக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதோடு, அனைத்து வளமும், வலிமையும் உடைய தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழ செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திடுவோம். மலரும் இப் புத்தாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்துகிறேன்.