கொடைக்கானலில் 27 வயது காதலனை கத்தியால் குத்திய 42 வயதுப் பெண்ணை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியிலுள்ள அன்னை தெரேசா நகரில் வசித்து வருபவர் பிரமிளா. இவரது முதல் கணவர் விபத்தில் இறந்து விடவே. இரண்டாவதாக மற்றொரு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதுவும் விவாகரத்தில் தான் முடிந்தது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரான பிரதீப் என்பவருடன் பிரமிளாவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தகாத உறவாக மாறியது. இப்படி நாட்கள் சென்று கொண்டிருக்க,
பிரதீப்பின் வீட்டில் அவரது பெற்றோர்கள் அவருக்கு திருமணத்திற்காக பெண் பார்க்க தொடங்கி விட்டார்கள். இதை அறிந்த பிரமிளா வேறொரு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என பிரதீப்பிடம் முறையிட்டுள்ளார். ஆனால் பிரமிளாவின் வார்த்தைகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் திருமணத்திற்கு பிரதீப் தயாராகியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் பிரமிளா வீட்டிற்கு வழக்கம்போல் பிரதீப் செல்ல, திருமணம் குறித்த பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. இதில்,
ஆத்திரம் அடைந்த பிரமிளா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரதீப்பின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். பிரதீப்பின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் ரத்த போக்கு அதிகமாக இருந்ததன் காரணமாக அவர் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பிரதீப் குமாரின் தாயார் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பிரமிளாவை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.