கன்னியாகுமரியில் ஓட்டுனர் ஓடையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வசிப்பவர் விக்டர் ராஜ். இன்னும் திருமணமாகாத இவர் வெளிமாநிலங்களுக்கு மீன் ஏற்றி செல்லும் டெம்போவில் ஓட்டுனராக பணிபுரிகிறார். கடந்த 11ஆம் தேதி இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதை தொடர்ந்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் குளச்சல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் பகுதியில் ஒரு ஓடையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குளச்சல் காவல்துறையினர் அங்கு சென்று விசாரித்ததில், ஓடையில் பிணமாக கிடந்தது விக்டர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது எனவே இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதைதொடர்ந்து உடலை மீட்டு காவல்துறையினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விக்டர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.