இலங்கைப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நபர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தஞ்சாவூர் விளார் சாலையில் இருக்கும் காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் யூசப். இவர் இலங்கையை சேர்ந்த அசிலா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று யூசப் தனது காரில் சென்று கொண்டிருந்த சமயம் அவரை வழி மறித்த மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள காரிலிருந்து இறங்கி தஞ்சாவூர் சாலையை நோக்கி ரத்த காயங்களுடன் யூசப் ஓடியுள்ளார்.
ஆனாலும் அவரை விடாத மர்மநபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து முதற்கட்ட விசாரணையில் யூசப் இயற்பெயர் ஜோசப் என்றும் குவைத் நாட்டில் வேலை பார்த்தபோது அங்கு பழக்கமான இலங்கை பெண்ணான அசிலாவை திருமணம் செய்ய இஸ்லாமிய மதத்திற்கு மாறியதும் தெரியவந்துள்ளது. திருமணம் முடிந்து தஞ்சாவூரில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் சில வருடங்களில் இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் அசிலாவுக்கு சொத்து இருப்பதால் யூசப் அதனைக் கேட்டு பிரச்சனை செய்துள்ளார். இதனால் இருவரிடையே தகராறு ஏற்பட்டு இரண்டு முறை அசிலா தஞ்சாவூர் காவல் நிலையத்தில் யூசப் மீது புகார் அளித்துள்ளார். தற்போது இருவரும் பிரிந்து வாழும் நிலையில் யூசப் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கரந்தை பகுதியில் வசித்து வந்த அசிலா தலைமறைவாகியுள்ளார். அவர் கண்டுபிடிக்கப்பட்டால் கொலைக்கான காரணமும் யார் கொலை செய்தார்கள் என்பது பற்றிய தகவலும் கிடைக்கப் பெறும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.