தங்க சங்கிலியை பறிப்பதற்காக ஒரு பெண்ணை முன்னாள் ராணுவ வீரர் குளத்தில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேக்காமண்டபம் புனத்து விளை பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மேரி ஜெயா அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மேரி முளகு மூடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு அதன் பின் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவர் மேரியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது, மேரி கத்தி கூச்சல் போட்டுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் ஓடி வந்ததால் அந்த நபர் மேரியை அருகிலிருந்த ஒரு குளத்தில் தள்ளிவிட்டார். இதனால் மேரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து உடனடியாக திருவட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மேரியிடம் சங்கிலியை பறிக்க முயன்ற அந்த மர்ம நபரை தேடி உள்ளனர். இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் பதுங்கி இருந்த அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் வெட்டுக்காடு விளை பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரான மெர்லின் ராஜ் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் கொலை செய்யப்பட்ட மேரியின் உடலை குளத்திலிருந்து மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவட்டார் போலீசார் மேரியை குளத்தில் தள்ளி விட்டு கொலை செய்த குற்றத்திற்காக மெர்லின் ராஜை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.