தொழிலாளியை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திருச்சி மாவட்டத்தில் உள்ள வாமடம் கல்யாணசுந்தரபுரம் நிசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக காந்தி மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நிசாந்த் ராமகிருஷ்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் மாநகராட்சி கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்தபோது தீடிரென வந்த 4 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்தனர். அதன்பிறகு அந்த மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் நிசாந்தை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சம்பவ இடத்திலேயே நிசாந்த் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிசாந்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதாவது நிசாந்த் ஏற்கனவே ஒரு கொலைவழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிசாந்தை மர்மநபர்கள் பழிக்குபழியாக கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையில் நிசாந்தின் உறவினர்கள் மற்றும் சக தொழிலாளர்கள் காந்தி மார்க்கெட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மர்மநபர்களை கைது செய்யக்கோரி திடிரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.