காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் 20 வருடம் கழித்து மனைவியின் அண்ணனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எம்.நகர் பகுதியில் சர்புதீன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவரது சகோதரி சிறுமுகையில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சர்புதீனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கார்த்திக் திடீரென சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து சர்புதீன் தனது நண்பர்களுடன் அம்மன் நகர் பகுதியில் நின்று கொண்டிருக்கும் போது, கார்த்திக் அங்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கார்த்தி சர்புதீனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சர்புதீனை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சிறுமுகை காவல் நிலையத்தில் சர்புதீன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.