கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானம் செய்ய சென்ற விவசாயி கத்தியால் குத்தப்பட்டு பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் இருக்கும் வால் பட்டறையில் சூசைராஜ் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற விவசாயி ராஜேந்திரன் அதனை தட்டி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சூசைராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரனை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சூசைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.