தங்கையின் காதலனை அடித்துக்கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லையா. இவர் கோவையில் இருக்கும் ஒரு பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பரவல் காரணமாக அங்கிருந்த வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதேபகுதியில் வசித்து வருபவர் ஜான்சி. இவரும் நல்லையாவும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் ஜான்சியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் ஜான்சியை அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இருவரும் தன் காதலை பல இடங்களுக்கு சென்று வளர்த்துள்ளனர்.
இதனையடுத்து ஜான்சியின் அண்ணனான பிரபு பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் ஜான்சியின் பெற்றோர்கள் தங்கையின் காதலை குறித்த பிரபுவிடம் பேசியுள்ளனர். இதில் பிரபு நல்லையாவை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் பிரபு அடிக்கடி ஜான்சியுடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஜான்சியை தவிர அவரது வீட்டில் இருக்கும் அனைவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதனை அறிந்த நல்லையா ஜான்சியின் வீட்டிற்கு வந்து மாடியில் உள்ள அறையில் ஜான்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்றவர்கள் வீடு திரும்பியதும் பிரபு மாடியில் சென்று பார்த்தபோது ஜான்சியும் நல்லையாவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் ஆத்திரம் அடைந்து உருட்டுக்கட்டையால் நல்லையா தலையில் தாக்கியுள்ளார். இதில் நல்லையா ரத்தம் சொட்டசொட்ட சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நல்லையாவின் வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் நல்லையாவின் பெற்றோர்கள் அங்கு வந்து நல்லையாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நல்லையாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.