விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியை சார்ந்தவர் அபூபக்கர் சித்திக். இவருடைய மகன் இர்பான் என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள மாணவர்களுடன் சேர்ந்து இர்பான் விளையாட சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இர்பான் தனது வீட்டிற்கு வந்து விட்டதால் அந்த 5 மாணவர்களும் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் இர்பானை அவர்கள் தாக்க தொடங்கியுள்ளனர். இந்த சத்தத்தை கேட்டு இர்பானின் தாய் மற்றும் தாத்தா ஓடிவந்து தடுத்ததால் அந்த 5 மாணவர்கள் அவர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் இர்பானின் தாத்தா தலையில் பலத்த காயமடைந்து அவர் மயக்கம் அடைந்துள்ளார். இர்பான் தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இர்பான் மற்றும் அவரது தாய் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இர்பானின் ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பாளை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முதியவர் கொலையில் சம்பந்தப்பட்ட 5 போரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.