நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொழுது பெண் ஒருவர் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் சிலர் கடைகள் மற்றும் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தில்லை நடராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் வழக்கு விசாரணை முடிந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது தாமதமானது.
இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் காவல்துறையினர் உதவியோடு, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது பாண்டியம்மாள் என்ற பெண் தனது வீடு இடிக்கப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாமல் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்றார். அப்போது போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த ஒரு வீடு மற்றும் இரண்டு கடைகள் இடித்து அகற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.