முன்விரோதம் காரணமாக தந்தை மற்றும் மகனை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமுதாநகர் பகுதியில் மாசிலாமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சில ஆடுகளை சொந்தமாக வளர்த்து அதை அப்பகுதியில் மேய்த்து வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசிலாமணி தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் குமார் என்பவர் அங்கு சென்று ஆட்டின் மீது கல்லை எடுத்து எறிந்து அதனை ஓட்டியுள்ளார். இதனைப் பார்த்த மாசிலாமணி ஏன் இவ்வாறு ஆடுகளை கல்லால் அடித்து துரத்தி விடுகிறாய் என்று திட்டி உள்ளார். இதனால் ரஞ்சித்குமாருக்கும் மாசிலாமணிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாசிலாமணி தனது மகனான செல்வகுமாருடன் வீட்டில் இருக்கும்போது ரஞ்சித்குமார் அவரது நண்பர்களான சிவபாலன், கார்த்தி மற்றும் கணபதி ஆகியோருடன் இணைந்து அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து ரஞ்சித்குமார் தனது நண்பர்களுடன் இணைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாசிலாமணி மற்றும் செல்வகுமாரை குத்திவிட்டு உங்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனால் மாசிலாமணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாசிலாமணியின் மனைவி தனது கணவர் மற்றும் மகன் இருவரும் ரத்த காயங்களுடன் கீழே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து அவர்கள் இரண்டு பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு 2 பேருக்கும்தீவிர சிகிக்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மாசிலாமணியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தந்தை மற்றும் மகனை கத்தியால் குத்தி சென்ற ரஞ்சித் குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.