கொரோனா ஊரடங்கால் கடந்த நான்கு அரை மாதமாக மூடிக்கிடக்கும் மதுக்கடைகளை நாளை முதல் திறக்க மும்பை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. இதேபோல மற்ற அனைத்து கடைகளையும் எல்லா நாட்களிலும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநில தலைநகர் மும்பையில் வைரஸ் தொற்றின் தாக்கம் உச்சக்கட்டத்தில் உள்ளது. எனினும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் Mechine begain again என்ற திட்டத்தின் கீழ் மும்பையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் இந்த தளர்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல மதுக்கடைகள் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் மும்பை மாநகராட்சி கடைகளை திறக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது.
அதன்படி நாளை முதல் மும்பையில் வாரத்தின் ஏழு நாட்களும் அனைத்து விதமான கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்து வைக்க மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. இது தவிர நாளை முதல் மும்பையில் மதுக்கடைகளில் மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுக் கடைகளில் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் வழிகாட்டுதல் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் மீறினால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.