பிற மாநிலங்களிலிருந்து துணைவேந்தர்கள் இறக்குமதி செய்ததில் தொடங்கி இப்போது வடமாநில இளைஞர்கள் மட்டுமே தமிழகத்தில் அனைத்து மத்திய அரசு அலுவலகப் பணியிடங்களுக்கு நிரப்பிவிட வேண்டும் என்று கொடிய வஞ்சக எண்ணத்துடன் மத்திய பாஜக அரசு செயல்படுவது கவலை அளிக்கிறது.தமிழ் நாட்டில் 90 லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு இலவு காத்த கிளி போல் காத்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில் மத்திய பாஜக அரசும் மத்திய அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை எல்லாம் வடமாநிலங்களுக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பது.

இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது. மதுரை ரயில்வே கோட்ட தேர்வில் ஏன் தமிழக இளைஞர்கள் அதிகம் தேர்வாகவில்லை என்ற கேள்விக்கு ரயில்வே அதிகாரி கூறியுள்ள காரணங்கள் முற்றிலும் பொருத்தமற்றவை. ஆகவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் காலிப்பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் இனிமேல் தமிழக இளைஞர்களுக்கு 90% முன்னுரிமை அளிக்கும் வகையில் போட்டித் தேர்வின் விதிகளை மத்திய அரசு உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்.

தமிழக அரசு பொதுத்துறை நிறுவனம் நடத்தும் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்கள் மட்டுமே முன்னுரிமை வழங்கும் விதியை உருவாக்க வேண்டுமென வலியுறுத்துகின்றேன். வேலையில்லா திண்டாட்டம் தமிழகத்தில் பெருகிக் கொண்டிருக்கின்ற நிலையில் மத்திய , மாநில அரசுகள் உரிய திருத்தங்களை கொண்டு வந்து தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வராவிட்டால் இளைஞர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்கின்றேன் என்று முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.