ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனைக்கு இயற்கை பொருட்களை கொண்டு நிரந்தர தீர்வு காணலாம்.
ஆண்களுக்கு இருக்கக்கூடிய பெரிய பிரச்சனையே தலைமுடி உதிர்வது தான். அதனால் பெண்களுக்கு இந்த பிரச்னை இல்லை என்று நினைத்து விடாதீர்கள். ஆனால் பெண்களை விட ஆண்களுக்கு தான் முடி உதிர்வு ஏற்பட்டு சொட்டை ஆகிவிடுகிறது. இக்காரணத்தினால் பல ஆண்மகன்கள் இளம் வயதிலேயே முதுமை அடைந்தவர்கள் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்த காரணத்தினால் அவர்கள் திருமணத்திலும் பல சிக்கல்களை சமாளிக்கிறார்கள்.
தலை முடி உதிர்விற்கு காரணம் மரபணுக்கள் மட்டும் இல்லை, வேறு சில காரணங்களும் இருக்கின்றது. அவற்றில் மனஅழுத்தம், ஊட்டச்சத்து குறைவான உணவுகள், பதற்றம் ஆகியவையும் அடங்கும். தலையில் சொட்டை விழுந்ததும் அவர்களின் தன்னம்பிக்கையும் இழக்க தொடங்குகிறார்கள். இதுமட்டுமின்றி அவர்களின் சொட்டை தலையை மறைப்பதற்கு பல விதமான எண்ணெய்கள், மருந்துகள் என வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது முழுப்பலன் அளித்திருக்காது.
அதற்கு பதிலாக அவர்களின் மனம் தான் பெரிதும் வருத்தப்பட்டிருக்கும். ஆனால் இப்படி கண்ட மருந்துகளை நம்பி வாங்கி வருத்தப்படுவதற்கு பதிலாக இயற்கை பொருட்களை நம்பலாமே..! இதனால் இருக்கக்கூடிய மீதி முடியை கூட பாதுகாத்திட முடியும். அது மட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த பொருட்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க தூண்டும். இயற்கை பொருட்கள் சொட்டைத் தலையிலும் முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனஅதற்கான இயற்கை வழிகளை பற்றி இப்பொழுது பார்ப்போம்..
1. கடுகு எண்ணெய் மசாஜ்:
கடுகு எண்ணெய்யை ஒரு வாணலியில் ஊற்றி சூடானதும், அதில் ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, ஆற வைக்க வேண்டும். பின்னர் அந்த எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். அதை தினமும் உங்கள் தலையில் தேய்த்து வந்தால், சில வாரங்களிலே சொட்டை தலையில் முடி வளருவதை உணரலாம்.
2. வெங்காய பேஸ்ட் மசாஜ்:
வழுக்கைத் தலைக்கு வெங்காயம் சிறப்பான பலனைத் தரும். அதற்கு சொட்டையான இடத்தில் வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், வெங்காயத்தில் உள்ள சல்பர் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை தூண்டி, முடியின் வளர்ச்சிக்கு உதவும்.
3. முட்டை மஞ்சள் கரு:
ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து, முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச விடுங்கள். இவ்வாறு வாரம் 1 முறை செய்து வந்தால், சொட்டையில் முடி வளர்வதை உணரலாம்.
4. வெந்தய மாஸ்க்:
முதல் நாள் இரவு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து தலையில் தேய்த்து 40 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் அலசி விடுங்கள். அதன் பிறகு தலையை நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை என்று ஒரு மாதம் தொடர்ந்து செய்து வர, தலைமுடி நன்கு வளரும்.
5. சீகைக்காய்:
பூந்திக்கொட்டை, நெல்லிக்காய், மற்றும் சீகைக்காயை எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் சேர்த்து 1 லிட்டர் நீராக வற்றும் அளவிற்கு கொதிக்க விட வேண்டும். பிறகு அதை வடிகட்டி அதில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து முடியில் நன்கு மசாஜ் செய்யுங்கள். பிறகு 1/2 மணிநேரம் ஊற வைத்து தலையை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வாருங்கள் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
6. நெல்லிக்காய்:
நெல்லிக்காயை துண்டுகளாக்கி, தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். பிறகு எண்ணெய் ஆறியதும், ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இதை தினமும் தினமும் தலையில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.