மது தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள சிவானந்தா காலனியைச் சேர்ந்தவர் செல்வம்(60). இவர் அங்குள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார் . கோவை சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் பால்ராஜ்(40). இவர் கூலி தொழில் செய்து வந்தார். செல்வமும் பால்ராஜும் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்தது . இந்நிலையில் காட்டூர் ரங்கன் வீதியில் அமர்ந்து செல்வமும் பால்ராஜும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது பால்ராஜின் செல்போனை காணவில்லை என்று கூறப்படுகிறது.
இதை செல்வம் திருடியிருக்கலாம் என்று பால்ராஜ் சந்தேகித்துள்ளார் . இதுகுறித்து செல்வத்திடம் அவர் கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த பால் ராஜ் இரும்பு கம்பியால் செல்வத்தை பலமாக தாக்கியுள்ளார் . இதில் படுகாயம் அடைந்த செல்வம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.