கொரோனா விழிப்புணர்வுக்காக மோட்டார் சைக்கிளில் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தவரை மாவட்ட கலெக்டர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூர் பகுதியில் இருசக்கர வாகன வீரரான தினகரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் காதுகேளாத மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். இதனையடுத்து தினகரன் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்குமாறும், முகக் கவசம் அணியுமாறும் வலியுறுத்த விரும்பியுள்ளார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுடன், கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுகாதாரமாக இருக்கவேண்டும் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்த தினகரன் நினைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு துண்டுச் சீட்டில் அச்சடித்து ஓசூரில் இருந்து லடாக் எல்லை பகுதி வரை தினகரன் பயணம் செய்துள்ளார். இவ்வாறாக 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு பயணத்தை வெற்றிகரமாக முடித்த தினகரன் மீண்டும் திருப்பத்தூருக்கு திரும்பியுள்ளார். இதனை அடுத்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவனருள் தினகரனுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.