மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை
புளியங்குடி அருகே இருக்கும் தலைவன்கோட்டையை சேர்ந்தவர் செல்வகுமார். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கவிதா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருந்துள்ளனர்.
கணவன் வெளிநாட்டில் பணி புரிவதால் கவிதா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக கவிதா மனநலம் பாதிக்கப்பட்டவராக தோற்றம் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்றைய முன்தினம் கவிதாவின் பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்த பொழுது வீட்டில் கவிதாவை காணவில்லை.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் கவிதாவை பல இடங்களில் தேடி உள்ளனர். அப்பொழுது ஊரின் அருகில் உள்ள கிணற்றின் அருகே கவிதாவின் செருப்பு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கவிதாவை தேடியுள்ளனர். பின்னர் கவிதாவின் உடலை கண்டெடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர் தீயணைப்பு வீரர்கள்.
இச்சம்பவம் அறிந்து புளியங்குடி காவல்துறையினர் விரைந்து வந்து கவிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.