சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் வைத்து மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டேரி அம்மன் கோவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாராயத்தை வைத்து விற்பனை செய்வதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சாராய விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பிவிட்டார். அதன்பின் சிக்கியவர் பச்சை மிளகாய் வட்டம் பகுதியில் வசித்து வரும் தங்கராஜ் என்றும் தப்பியது இவரது மகன் விஜி என்றும் காவல் துறையினருக்கு தெரியவந்தது.
இவ்வாறு தந்தை- மகன் இருவரும் சேர்ந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் செல்போனில் தொடர்புகொண்டு வாடிக்கையாளர்கள் வரச்சொல்லும் இடம் மற்றும் வீட்டிற்கு விரைந்து சென்று மோட்டார்சைக்கிளில் சாராயம் விற்று வருவதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தங்கராஜை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 20 லிட்டர் சாராயம், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மகன் விஜியை வலைவீசி தேடி வருகின்றனர்.