பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற திருடனை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தனம்பாளையம் பகுதியில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது நிலத்தை பத்திர பதிவு செய்வதற்காக நெருப்பெரிச்சலில் உள்ள அலுவலகத்திற்கு 11 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை பையில் எடுத்துக்கொண்டு அவரது மனைவி தேன்மொழியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய முடியாததால் கணவன்-மனைவி இருவரும் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் கேத்தம்பாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென தேன்மொழி கையிலிருந்த பணப்பையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து தகவலறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு கமிஷனர் மகேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கேமராவில் தேன்மொழியிடமிருந்து பணப்பையை பறித்து சென்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் கேத்தம்பாளையம் பாலம் வழியாக சென்றது பதிவாகி இருந்தது. இதனையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின்படி, குற்றப்பிரிவு துணை கமிஷனர் ரவி மேற்பார்வையில் திருடனை பிடித்ததற்கு 2 தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பின் தனிப்படை காவல்துறையினர் பணத்தை பறித்துச் சென்ற திருடனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தேன்மொழியிடம் பணத்தை பறித்துச் சென்ற திருப்பூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அருண்குமாரிடம் இருந்த 9 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது.