இளைஞரிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூடவுன் ஏபாநகர் பகுதியில் இஹ்திஷாம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இஹ்திஷாம் தனது வீட்டின் அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் மற்றொரு வீட்டில் வைத்திருந்த சி.சி.டிவி கேமரா பதிவை பார்த்ததில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சி.சி.டிவி கேமரா பதிவுகளுடன் இஹ்திஷாம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைப் போல் முஸ்லிம்பூர் பகுதியில் வசிக்கும் ஹசேன் அஹ்மத் என்பவர் வாரச்சந்தை பகுதியில் காய்கறிகளை வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பெருமாள்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இளைஞரை மடக்கி விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் முருகன் என்பதும், இரண்டு பகுதிகளில் 2 இருசக்கர வாகனங்களை திருடியதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்த 2 இருசக்கர வாகனத்தையும் மீட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.