மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டை காவல்துறை சரகம் சு. கள்ளி பாடி கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலமாக மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மணலூர்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சாக்கு மூட்டைகளுடன் வந்த மூன்று இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். அந்நேரம் மோட்டார் சைக்கிளுடன் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.
இதனை அடுத்து அந்த சாக்கு மூட்டைகளில் மணல் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இது பற்றி விசாரணை செய்ததில் அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன் மற்றும் துரை உள்பட 3 பேர் பெண்ணை ஆற்றில் இருந்து 3 மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று மோட்டார் சைக்கிளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.