மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே 173 பேர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் உடனடி மருத்துவ சேவைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக உதவியாளர், ஒரு ஓட்டுநர் ஆகிய குழு பணியில் ஈடுபடுவார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் வேகமாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 2,000 செவிலியர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறை என்ற நிலையே இருக்காது என தகவல் அளித்துள்ளார். மேலும் சென்னையில் 254 சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிராவை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது, தமிழகத்தில் இதுவரை 6.40 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.