மதுரையில் மூதாட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஊமச்சிகுளம் என்ற பகுதியில் பொன்னுத்தாய் என்கிற மூதாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துச்செல்வம் என்பவர் மூதாட்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதை தடுக்க வந்த பக்கத்து வீட்டு பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு அவரது தலைமுடியை முத்துச்செல்வம் அறுத்து வீசியுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திலேயே பொன்னுத்தாய் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். வெட்டுக்காயங்களுடன் பக்கத்து வீட்டுப் பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தினார் . முதற்கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னுத்தாய்க்கும் முத்துச்செல்வத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட அரிவாள் மற்றும் முத்து செல்வத்தின் செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றி கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.