ஊரடங்கால் உணவு கிடைக்காத குரங்குகள் பசியால் வன்முறையில் ஈடுபட தொடங்கி மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
தாய்லாந்தில் லோப்பூரி நகரம் பிரபல சுற்றுலாத் தலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவு பொருட்களை சாப்பிட ஒரு குரங்கு கூட்டமே காத்திருக்கும். அதுவும் 10 அல்லது 20 குரங்குகள் அல்ல 6000 குரங்குகள் காத்திருக்கும். இந்நிலையில் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு இல்லை. அதனால் குரங்குகள் உணவு இன்றி வன்முறையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உணவுக்காக ஓடுவதையும் மக்கள் பயத்துடன் ஒளிந்து ஒளிந்து நடப்பதையும் பார்க்கமுடியும்.
தீராத பசி குரங்குகளை முரட்டுத்தனமாக மாற்றியதால் அந்த குரங்குகள் மக்களுக்கு பிரச்சனையாக இருந்து வருகின்றது. குரங்குகளை கூண்டில் அடைத்த காலம் மாறி தற்போது குரங்குகளுக்கு பயந்து மக்கள் வீட்டிற்குள் அடைந்துள்ளனர். மக்கள் சினிமா தியேட்டராக உபயோகித்த இடத்தை குரங்குகள் தற்போது ஆக்கிரமித்து அதை தங்கள் குடியிருப்பாகவும் உயிரிழக்கும் குரங்குகளை அடக்கம் செய்யும் கல்லறையாகவும் உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டன. அவ்விடத்திற்கு மனிதர்கள் சென்றால் பின்னர் முழுசாக வீடு திரும்புவது கடினம் தான். எவ்வளவோ முயற்சித்தும் ஒன்றும் செய்ய முடியாத காரணத்தினால் குரங்குகளுடன் வாழ்வதற்கு மக்கள் முயற்சி செய்து வருகின்றனர் .
அதாவது பசியால் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவுப் பொருட்கள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள், சாக்லெட்டுகள் போன்றவற்றைத் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் இதனால் புதிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது.. சர்க்கரை அதிகம் இருக்கும் உணவுகளை சாப்பிட்ட குரங்குகள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்ய தொடங்கிவிட்டன. மூன்று மாதங்களில் குரங்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது. எனவே தற்போது வனத்துறை அலுவலர்கள் குரங்குகளை பிடித்து அவற்றிற்கு கருத்தடை செய்ய முடிவெடுத்துள்ளனர்.