உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூபாய் 2 லட்சத்து 1115 ரூபாய் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள மதுக்கூர் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி அவர்கள் சோதனை செய்துள்ளனர். அந்த வேனில் திருப்பதி என்பவர் ரூபாய் 2 லட்சத்தி 1115 ரூபாய் பணத்தை கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் இந்த பணத்திற்கான உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் காவல்துறையினர் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.