முன்னணி நடிகை நிக்கி கல்ராணி காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிக்கி கல்ராணி. இவர் தன் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் மோசடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், “கோரமங்களா பகுதியில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் நிகில்.
இவரது ஹோட்டலில் கடந்த 2016 ஆம் ஆண்டு நான் 50 லட்சம் முதலீடு செய்து இருந்தேன். இதற்கு அவர் மாதம் ஒரு லட்சம் எனக்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் தரவில்லை. நான் கொடுத்த 50 லட்சம் முதலீட்டையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதுபற்றி பலமுறை அவரிடம் நான் கேட்டேன்.
ஆனால் அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. ஆகையால் அவர் என்னிடம் வாங்கிய 50 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று நிக்கி கல்ராணி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அம்ருதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.