போலியான கால் சென்டர் நடத்தி இருவர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அடையாறு சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் கடன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் 10,000 ரூபாயை வாங்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து தன்னிடம் பணம் கேட்டு தொல்லை தருவதாகவும், அவர்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தனக்கு தெரியவந்ததாகவும் அதில் கூறியுள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வேப்பம்பட்டு பகுதியில் போலியாக கால்சென்டர் நடத்துபவர்கள் பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கடன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து நங்கநல்லூரில் வசித்துவரும் சண்முகப்பிரியா மற்றும் செவ்வாய்பேட்டை பகுதியில் வசித்து வரும் பிரேம்நாத் ஆகிய இருவரையும் கால் சென்டர் நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.