அம்மா சிமெண்ட் வழங்கப்படவில்லை என ஊராட்சி மன்ற வளாகத்தின் முன்பு திடீரென கூலித்தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்ரம்பாக்கம் ஒரியன் நகர் பகுதியில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் குறைந்த செலவில் சொந்தமாக வீடு கட்ட முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பன்னீர்செல்வம் அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த 2020 – ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் அம்மா சிமெண்ட் திட்டத்தின்கீழ் 19000 ரூபாய் வங்கியில் பணம் செலுத்தி ரசீது பெற்றுள்ளார்.
அதன்பிறகு இதுநாள்வரை குடோனில் இருந்து அவருக்கு அம்மா சிமெண்ட் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி மன்ற வளாகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பன்னீர்செல்வத்திடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரிகள் பணம் செலுத்தியதிற்கான ரசீதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு குடோன் உரிமையாளர்களிடம் தான் இது குறித்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பன்னீர்செல்வம் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.